ஏனையவை

புன்னகை!!!

Inthiran
04, December 2017
Views 136

ஆளைக் கொல்லுகின்ற
ஆகாத குளிர் காலம்
மேலும் மெல்ல மெல்லக்
கொட்டுகின்ற பனித்துளிகள்
நீளப் படுத்துறங்கக்
கெஞ்சுமென் நெஞ்சம் - இருந்தும்
வேலை போய் விடுமே
என்றெழுந்து நடு நடுங்கி
ஏதோ நினைவுகளைத் துடைத்து
எங்கோ எறிந்து விட்டு
கல்லாக மனம் இறுக்கிக்
கடமைகளை நினைத்தபடி  
எல்லோரும் போல் நானும்
அரைகுறையாய் உணவருந்தி
அவசரத்தில் ஓடி ஓடி
அலுவலகம் போய்ச் சேர்ந்தால்
அங்கும் வழமைபோல
அரைகுறையே ஆட்சி செய்யும்
பொங்கி வரும் பொல்லாத கோபம்
பதில் சொன்னால்
செங்கதிராய்ச் சிவக்குமன்றோ
எங்கிருந்தோ எனக்குள்ளும்
மங்காத சிரிப்பைக் கொண்டு வரும்
அந்தச் சிநேகிதப் புன்னகை……. !