ஏனையவை

அன்பின் சிகரம் ஆசான் அலெச்சாந்தர்

அருட்கவி
14, November 2017
Views 156

இயேசுவே இரக்கமாயிரும்!!
அன்பின் சிகரம் ஆசான் அலெச்சாந்தர்
அடைக்கலம் புகுந்தனர்
இயேசுவின் அடிதனில்!

ஆலம ரமொன்று அடியோடு சாய்ந்ததோ?
சாலச் சிறந்த சற்குணன் அலெக்சார்
பால பண்டிதன் பண்பின் சிகரம்
ஓல மிடினும் ஒருமுறை வருவரோ?

இலக்கண வித்தகன் எண்திசை போற்றிடும்
தலைக்கன மில்லாத் தங்கமாம் ஆசான்!
கலகலப் பில்லாக் கண்ணியன்! கற்றோன்
விலையிட முடியா மாணிக்கமே விரைந்ததேன்?

அன்பின் சிகரம்! ஆழறி வுடையோன்!
என்றும் சிரித்த எழிலாம் வதனன்!
தன்னல மறியாத் தங்க மனத்தினன்;
நண்ணினன் இயேசுசை நாமெலாம் தவித்திட!

இறுதி மூச்சிலும் எம்நிலை உயர்த்திட
உறுதியா யுழைத்த உத்தம புருசரே!
அறவனே! ஆசான் அலெக்சரே இரங்கினோம்
மறுமுறை வருவிரோ வண்தமி ழூட்டிட?

சர்வ மதப்பிரியன்! சாத்விகன் சற்குரு
கர்வ மறிந்திடா கன்னித் தமிழ்மகன்
தற்பெரு மையிலாத் தங்க மனசினன்
பொற்பத மடைந்தனன் புண்ணியா சாந்தியே!

எத்தகை அன்பினை என்னிலே வைத்தீர்?
முத்தரே இறுதி மூச்சிலும் புகட்டிய
சித்தரே காண்பனோ சிரித்த உம்முகம்
கர்த்தரின் தாளதில் காண்பீர் சொர்க்கமே!

அற்புதரே உமதாத்மா இயேசுவின் பாதாரங்களில்
சரணாகதியடைய இறைஞ்சினோம்
அன்பு மாணவன் அருட்கவி ஞானகணேசன்