புரட்சி கவிதை

சிந்தியடா...

Inthiran
13, November 2017
Views 290

ஆடவன் பார்த்தாசைப் படக்கூடாதென்று
மூடிவைத்து ஓடிய காலம் ஒன்று உண்டு
ஆடவனே ஆட வாடா என்று சொல்லித்
தேடி இழுக்கின்ற காலமொன்றும் உண்டு

பாடுபடும் வேளையிலே பக்கத்திலே இருந்து
ஈடுபட்டு வேலைகளால் இன்பம் சுகித்து - வெறும்
காடு வெட்டினாலும் என்ன கவலையின்றி - ஒரு
கோடு போட்டு வாழ்ந்த அந்தக் காலமெங்கே

நீடு வாழும் காலமிது நிம்மதியே இல்லை என
ஏடு சொல்ல எழுதி வைத்துச் சாவதென்ன
நாடிவந்த நாடு எல்லாம் நாகரிகமென்று சொல்லிக்
கூடிழந்து போவது தான் லட்சியமா

ஈடுமில்லையுன் மொழிக்கு ஏடுமில்லை எழுதி வைக்க
நாடும் இல்லை என்பது தான் உண்மையடா - உனக்கு
நாதி இல்லை என்பதிலே சம்மதமா -சொந்தம்
மீதியின்றிப் போகுமுன்னே சிந்தியடா தமிழா சிந்தியடா...