Poem of the day

தனிமையின் முதுமை

நெஞ்சில் பாசத்தை வைத்து 
நெருப்பை தான்  அள்ளி வைத்தது போல
பிள்ளைக்காக அன்பை பாய்ச்சி  
தன் இளைமையையும் இழந்து விட்டு

ஏனையவை கலையடி அகிலன் 16, September 2017 More

காதல் கவிதை

நில்லாயோ நிலவே!!!

09, June 2017
Views 835

உன் நினைவற்ற பொழுதுகள் - என்
உயிரற்ற தருணங்கள்
அருகில்லை நீயெனினும் - அகத்தில்
நீயின்றி வேறில்லை

கைகோர்த்து செல்லும்
காதலர் காண்கையில்
செந்நீர் சொரியும் என் விழிகள்

கூடிக் குலாவும்
ஜோடிப் புறாவில்
ஜாதி மறந்து ஓர்
ஜாலக் கற்பனை

ஓடி வரும் தென்றல் - என்
உள்ளம் வருடி விட்டுப் போகும்
ஆடி வரும் அலையில் - என்
ஆழ் மனதும் நனையும்

நினைவலைகள் நெஞ்சை வருத்தும் - மனம்
நீங்காத வாசனைகள் விட்டு விட்டு வீசும்
எந்தப் பூவும் அருகில்லை எனினும்
மலர்க்காட்டில் நிற்பதாய்
மனம் மட்டும் சொல்லும்

கடப்போர் அனைவரிலும் காதலியே உந்தன்
வதனத்தின் விம்பம் தெரியும்
நிலவின் மறைவினிலுந்தன்
கூந்தல் நிறமது புரியும்

இருதயத்தின் ஓர் மூலையில்
முள்ளிருந்து தைக்கும்
தேகமெங்கும் நிலை கொண்ட வலி
தெய்வீகமாய்த் தோன்றும்

என் மனம் பறித்தாயே பெண்ணே
உன் மனம் தருவாயே கண்ணே
முடிந்தவரை தந்துவிடு – அன்றேல்
முயன்றென்னைக் கொன்று விடு
சுடரும் காதலின் ஜோதியில் - என்
ஆவியும் அடங்கிப் போகட்டும்

அறிவியலின் ஆச்சர்யமே
விஞ்ஞானத்தின் விரல் தீண்டா
விந்தைக் கிரகமே
நான்தான் உன் கூட்டமில்லையே - பின்
ஏனடி என்னைக் கவர்ந்திழுத்தாய்
உன்னைச் சுற்றவிட்டு
என்னை விட்டுச் சென்றாய்

காதலே நீ அருகிருந்தால்
உந்தன் மேனியின் ஒளி கொண்டு
புத்தொளி ஏற்றுவேன்
இருண்டு கிடக்குமென்
இருதயமெனும் சிதறிப்போன சிகரத்தில்

காய்ந்த என் தேகத்திலும்
கணியம் உண்டெனக் காண்பித்தவளே
காணாமல் சென்றதென்னவோ என்னை

வெட்கம் உடுத்த வெள்ளை ரோஜாவே - உன்
வெட்கத்தில் சொக்கி வெதும்பிப் போனேன்
முட்களிள் சிக்கிக் கிழிந்தும் போனேன்
பயப்படாதே சுகம் பெறுவேன் - உந்தன்
மெல்லிதழ் என்னைத் தீண்டும் பொழுதினில்

காதலின் பரிசு கரங்களில் கனக்க
எரிக்கும் காதல் தீயில் வெந்து - நாளும்
உந்தன் காலடி தொடருமென்
காதலின் தீவிரம் அறியாயோ கண்ணே

அலைந்து அலைந்து
அழிந்து போயின - எந்தன்
கால் ரேகைகள்

பூக்கள் வாங்கியதில்
பணக்காரியானாள் பூக்காரி

உலகமே மாறிப் போனது
நீ ஒருத்தியைத் தவிர
உந்தன் பிடிவாதமோ
புதிதாய்ப் பருவமெய்திய பருவ மங்கை போல்
தினமும் பொலிவாகித் தெரிகிறதே

அடியே…….
சம்மதம் பெறவன்று
நான் உன்னைத் தொடர்வது
சந்தித்துப் பேசவோ சாடையில் அழைக்கவோ
சௌகர்யம் இன்றியும் சந்தோசம் இதுவென்று
பொய்கள் சொல்லி சளைக்கவும் அன்று

நில்லடி ஒருகணம் நன்று – உந்தன்
திருவடி தரிசித்தல்
யான் செய்யும் தொண்டு

ஒளி எரிக்குமுன்
கூரிய விழி கொண்டு
ஒரு முறையேனும் பாரடி என்னை – என்
விழி வழியும் காதலுந்தன்
உளம் நனைக்கும்
அது போதும் எனக்கு – என்
ஜீவன் நிலைக்கும்