ஏனையவை

சோழியபுரம் (சுழிபுரம்)

Inthiran
28, August 2015
Views 158543

ஆழி இருக்குமிடம்
அதிகதூரமில்லை - பத்திர
காளி வீற்றிருப்ப
தங்கேதான் அங்கேதான்
சோழர் வம்சமது
தினவெடுத்த தோளோடு
நாளும் நல்லபடி
நலமாக வாழுமிடம்
 
பாழும் பகை வந்து
படுத்திவிட்ட போதுமொரு
நாளும் தமிழ்மறவா
நல்லவர்கள் வாழுமிடம்
 
திருவடிநிலை கண்ட
அரும்பெரும் வரலாறு
அன்னைபரமேஸ்வரியும்
அருள்கொடுக்கும் நந்தவனக்
கண்ணன் கிருஷ்ணரெல்லாம்
காத்துவரும் புனித தலம்
 
கோயில் மணியோசை
கொஞ்சித் துயிலெழுப்ப 
வாயில் அன்னை தந்த
தேநீர் சுவை கொடுக்க
பூக்கொண்டு சென்று
பூசை முடித்து வர
நல்ல நாள் தொடங்கும்
நாங்கள் வாழ்ந்த காலம்
 
மதன ராசாக்கள்
மைவிழி ரோஜாக்கள்
மகேந்திர லோகாக்கள்
மிதுலை நாயகிகள்
சகலரும் தொழில் செய்து
நலம் வாழும் நல்ல இடம்
 
வித்தைதரக் கல்லூரி
விக்டோரியா என்றால்
சத்தியவான் அதிபர்
அருணாசலம் நினைவில்
 
விளையாடும் விருப்போடு
வளையாடும் அங்கே
கலையாடும் கனிவோடு
இலையாடும் எங்கும்
பக்திக்கும் சக்திக்கும்
பரவசத்தின் முத்திக்கும்
எத்திக்கும் தித்திக்கும்
என்னுடைய தேசமது
 
மெய்கண்டான் பாடசாலை
மேலும் கல்வியிலே
ஐயம் தீர்க்கின்ற
அழகு வாசகசாலை
நெசவு நிலையங்கள்
கூட்டுறவுச் சங்கங்கள்
கனவில் கதை சொல்லும்
கவினுறு காட்சிகள்
எனவே என் நினைவில்
என்றென்றும் அழியாதே
 
தனபாலன் படித்த இடம்
தலைகோதி முடித்த இடம்
துரை செல்வம் பாலு எனத்
துறை சேர நடந்த இடம்
அல்லும் பகலும் அங்கே
ஆர்ப்பரித்துக் கிடந்த இடம்
 
முக்கனியும் சர்க்கரையும்
மூடி வைத்த பால் பழமும்
வக்கணையாய் வாயினிக்க
வாங்கிச் சுவைத்த இடம்
சொர்க்கமென்றால் என்னவென்று
சொல்லிக் கொடுத்த இடம்
 
மாதரசி பூதராசி
மனம்மகிழத் திருவிழாவும்
காதினிக்கச் சோகமின்றிச்
சின்னமணி வில்லிசையும்
மரவள்ளிக் கிழங்கு தரும்
பண்ணாகம் பலவாறு
புதுநெல்லுப்  பொங்கி வரும்
பறாளாய் வயற்காற்றும்
அடிக்காமல் கல்விதந்த
அல்லிராணி ஆசிரியர்
எல்லாம் மாறிடினும்
என்நினைவு மாறவில்லை
 
காக்காய்க் கறிசமைத்துக்
கருவாடு மென்று தின்ற
சோக்கான சோழியர்கள்
வாழுகின்ற திருநாடு
 
பறாளாய் முருகனும்
விண்மோதும் கண்கோதிக்
காக்கைக் பிள்ளையாரும்
சேட்டைகள் குறையாத
செல்லக் குழந்தைகளும்
நோக்குமிடமெல்லாம்
அம்மன் கோயில்களும்
காசிப்பிள்ளை கடையும்
காந்திகடையோடு
அப்புத்துரை வெதுப்பகம்
துரையப்பா கடை என
அந்தநாள் ஞாபகம்
நெஞ்செல்லாம் பசுமையாய்
 
அரசடி பஸ் நிலையம்
அடுத்துவரும் சந்தையது
சத்தியக் காடு அங்கே
சகலதும் வாங்கலாமே
 
தொல்புரம் ஒருபுறமும்
மூளாய் மறுபுறமும்
மெல்லெனத் தாலாட்டும்
மேன்மைகள் குறையாது
சில்லெனச் சிலிர்க்கவைக்கும்
சிங்காரச் சுழிபுரமே