காதல் கவிதை

தரணியில் கால் பதித்தாள் என் தேவதை

12, April 2011
Views 119230

வெள்ளைத் திரை மூடி விண்வெளியில் பறப்பதாய்..
தேவதைகளை நினைத்திருந்தேன் நான்..
கள்ளமில்லா மனம் கொண்டு..
கால் பதிப்பாயென தரணியில்..
கனவிலும் நான் நினைத்திருக்கவில்லை…

வண்ணத் தூரிகைகளில் வரும் அழகினை விட..
எண்ணக் கற்பனைகளில்
உன்னுருவம் அழகாய் எழுகின்றதே..
அழகே.. நீதான் அந்த தேவதையா..?

ஓவியங்கள் கொண்ட அழகு.. பாதி கூட இல்லை..
உன்னில் மொய்த்திருக்கும் மொத்த அழகுமே…
வற்றாத கடல் நீராய்…
உன் வதனம் எங்கும் தவழுமே. அழகாய்..
உன்னைத் தொட்டுவிடத்துடித்து தவிப்பாய்..
தினம் நட்சத்திரங்கள் விழுகின்றன பூமியில்..
உன் வதன தரிசனம் காண..
அழகில் நீ மேலானவள் என்பதால்..

துளித்துளியாய் தேன் சேர்த்து
காத்திருக்கின்றன மலர்கள்..
வண்ணத்துப் பூச்சிகளோ..
உன்னில் மொய்க்க முடியா
ஆதங்கத்தில் தற்கொலை செய்து கொள்ளும்..
சிலந்தி வலைக்குள் தானாகச் சிக்கி…

பெய்யும் மழைத் துளிகள் கண்டு நீ…
குடை பிடிக்காதே…
உன்னில் தெறித்து மோட்சம் காண..
மேகம் தூதனுப்புகின்றது துளித்துளியாய்..
வானவில்லையும் விட
அழகானவள் நீ என்பதால்..

சில கணமேனும் நீ முகம்
பார்க்கும் கண்ணாடியாய்…
நானிருக்க ஆசை..
உன் எழில் கண்டு மகிழ..
மலர் முகத்தில் தவழும் சிரிப்பை ரசிக்க..

மின்சாரம் இல்லா இரவுகளிலும்…
உன் ஞாபகம் வந்தால் போதும்..
உலகமே பளீரிட்டு மின்னும் மாயம் என்ன..?

வாழ்க்கை என்றால் நான் என்றிருந்தேன்..
நீ வந்தபின் அது நாமாய் மாறியதென்ன.