ஏனையவை

குரும்பசிட்டி மண்ணே!!!

Inthiran
12, August 2017
Views 403

காதல் அரும்பவிட்ட என் அழகான
குரும்பசிட்டி மண்ணே உன்னைத்
திரும்பித்தான் பார்க்கின்றேன் மீண்டும்
மீண்டும் விரும்பித்தான் பார்க்கின்றேன்

ஆழக் கிணறு வைத்து அதற்குள்ளே
நீளக் கயிறு வைத்து அள்ளிக் குடிக்க
அமிர்தமெனத் தண்ணீர் வைத்துக்
கோலங்களும் சொல்லி வைத்தாய்

என்ன விதை போட்டாலும் அங்கே
சொன்னபடி எழுந்து முன் வருமே
பூமிப் பந்தைத் துளைத்தபடி ஒரு
கன்னிப்பெண் கன்னத்தில் பருப்போல

அங்கமெல்லாம் செங்கம்பளம் விரித்துப்
பச்சைப் பயிர் வளரப் பரிகாரம் வைத்து
இச்சையுடன் குடிக்க இளநீரும் வைத்தாய்
மெச்சுகின்றேன் மெய்சிலிர்க்க ஐயமில்லை

வாசிக சாலை வரலாறு படைக்கும்
தேசிய கீதங்கள் தேனாக இசைக்கும்
பூசிய வண்ணங்கள் புகழ் பூத்து இருக்கும்
நாசியில் பூக்களின் வாசனை இழுக்கும்

பசி தீர்க்கும் பால் பழங்கள்
பலகாரம் குறைவில்லைப்
பக்குவமாய்ப் பரிமாறும்
பழக்கத்தில் குறைவில்லை

வேம்புக்கும் குறைவில்லை
பாம்புக்கும் குறைவில்லை
மோகனாமாய் அழகொளிரும்
முக்கனிக்கும் குறைவில்லை

ஊர்காக்க வைரவரும்
உதவிக்கு ஒரு அம்மனும்
பேருக்குப் பல பேரும்
பெரிய கல்லூரிகளும்

பொற்புடை மக்கள்
பெருமையுடன் போற்றியதும்
சிற்பக் கலாகேசி
சிறந்து விளங்கியதும்

ஆவணக் காப்பாளர்
அவதரித்து வாழ்ந்ததுவும்
கவிஞர்கள் கலைஞர்கள்
கவினுற வாழ்ந்ததுவும்

தோட்டம் துரவு எனத்
துறை சார்ந்து மகிழ்ந்துவும்
வீட்டின் அழகுதனை
வியப்பாக அமைத்ததுவும்

சங்கீதம் போல் சமையல்
பொங்கிப் படைத்ததுவும்
அங்கே தான் அங்கே தான்
அத்தனையும் அங்கே தான்

செம்மண்ணும் செந்தமிழும்
சிரிக்கின்ற சங்கமமாய்
இம்மட்டும் இருக்கின்ற
இங்கிதங்கள் நிறைந்த இடம்

நாதன் கண்ணன் ரவி
தேவன் தேவியுடன்
சீலம் நிறைந்தவர்கள்
செவ்வனே சிறந்த இடம்

அன்னம் பூரணமாய்
அளவோடு சுவைப்பதற்கு
இன்னும் காரணமாய்
இருக்கின்ற பூமியது

இராசன் லோகன் பெற்ற
மாணிக்க வாசகரும் சக்தி
பரா சக்தி சாதித்து வந்த
மருந்தகமும் விருந்தகமும்

வெற்றிவேல் குரு சிவாஜி
சச்சிதானந்தம் மற்றும்
கந்தையா பெயர் சொல்லும்
சிங்காரக் குரும்பசிட்டி