ஏனையவை

வேண்டவே வேண்டாம்....

10, June 2017
Views 1048

ஒரு பக்கம் சொக்க வைக்கின்றது
சொர்க்க அழகு - மறுபக்கம்
மரண அலறல்கள்
கோரத்தின் குருதித் தெளிப்புகள்...
இப்பக்கம் இருள் அப்பக்கம் ஒளி
எப்பக்கம் என்னுடையது...

நன்று நல்லதோர் மாயவலையிது...
சொர்க்கம் வேண்டாம் - அங்கே
சிற்றின்பங்களும் மாயக் கனவும்..
சில்லாபித்திருக்குமே!
நரகமும் வேண்டாம் - அங்கே
நல்லவர்கள் இல்லையாம்..

மேற்கதி வேண்டாம் - அங்கே
முற்றும் துறந்தவர்கள் இருந்தால்
என் செய்வேன் நான்??
மரண அறைகளும் வேண்டாம்
எனைச் சூழ்ந்திருந்த துரோகிகள்
அந்த நல்லவர்கள் இருந்தால்?
வேண்டவே வேண்டாம் விட்டுவிடுங்கள்..

பிண்டங்கள் அலறுகின்றன - அடிக்குரலில்
பிணங்களும் கதறுகின்றன.. - மறுபக்கம்
மெல்லிசை மட்டும் வெளி வருகின்றது
மென்மையாக அழைக்கின்றது..
குழப்பத்தில் நான் எப்பக்கம் போவது??

மரணக்கடவுளா? தேவலோக வேந்தனா?
கொஞ்சம் உதவிடுங்களேன்...
நான் வாழ்ந்த சமூகம் எங்கே?
சொர்க்கத்தில் இருக்குமா?
அல்லது நரகத்திலா? - அவர்கள்
பொய்களால் வாழ்ந்து வென்றவர்கள்
உம்மையும் தாண்டி குடியேறி இருக்கலாம்...
சொர்க்கத்தில்......

நல்லவர்களுக்கு நரகத்தில் இடமில்லை
அது சரி அவர்கள் நல்லவர்களா? கெட்டவர்களா?
சொல்லிப் போங்கள் கொஞ்சம்...

அதுவரை சொர்க்கமும் வேண்டாம்
நரகமும் வேண்டாம்... நானாகவே
இருக்கின்றேன் நான் தனியாக....