ஏனையவை

இன்னுமோர் வாய்ப்பில்லை....!

08, June 2017
Views 454

இடர் மிக்கதென அறிந்து கொண்டேன்...
துயர் மிக்க வெம்மைக்கு இதமான
குளிர்த்துகள்களை தேடும் போது...
மலர்ச்செண்டினை வாங்கியபடி கவனமாய்
மறுகையில் மறைத்துக் கொள்கின்றேன்
இதயத்தின் காய வடுக்களை...

அப்போது முதல் இப்போது வரை
நேசத்தின் பொருட்டு நான் நடந்த
பாதைகளையும் பற்றுதலையும்
எக்கனமும் சிந்தித்ததில்லை
மாற்றுப் பாதையினை - அதனையும்
ஒளியின்றி காட்டிக் கொடுக்கின்றது
வழியறியா இருட்டின் நிழல்....

ஏராளம் உண்டு சொல்வதற்கு ஆனால்
அடைமழை போல் வார்த்தைகள் மட்டும்
அல்லல் படுகின்றன ஆதலால்
நடுங்கியப்படியே வந்து போகின்றன
ஆழ இழுக்கும் மூச்சு....

இருளைக் கடந்து மறைக்கப்பட்ட எதையோ
வெளிச்சமின்றி தேடுகின்றன கைகள்...
பதறுகின்றது மனது இப்பெரும்
இரைச்சலை தனியாகத் தாண்ட
அப்போதும் கூட அபத்தங்கள்
மட்டும் விடமாய் தொண்டையில்....

கேள்விகளால் பரிகசிக்கும் உலகின்
முன் தைரியம் தரும் உன் கைகளை
பற்றிக்கொள்ள வேண்டும் இறுக்கமாக....
அச்சுறுத்தும் வதைகளாய் வார்த்தைகளின்
அர்த்தங்கள் மட்டும் எனை நெருங்கி
நெருக்கும் போது போது இருள் நிழல் கூட
முறைத்துப் பார்க்கின்றது....

சாமானியன் என் ஏக்கங்களை
சாந்தமாய் சரி செய்வேன்...
மற்றுமோர் வாய்ப்பிருந்தால்..
அதுவரை அடர்த்தியாகி விட்டது
அமைதியாகி விட்டது என் பலவீனங்கள்...
இப்படியாக உலகத்தின் பால் எனை மறைத்து
எதையோ தேடி விரைந்து கொண்டு
நிற்காமல் தள்ளாடுகின்றது என்
துடுப்பற்ற வார்த்தையில்லா என் ஒற்றைப்படகு.....

இங்கு இன்னுமோர் வாய்ப்பு நிச்சயம் இல்லை
அதோ தூரத்தில் ஓர் ஒளி மட்டும் தெரிகின்றது
அதனை நோக்கி பயணிக்கின்றேன்
திரும்பிப் பார்த்தால் எனைச் சுற்றி
உறவுகளின் கதறல்கள்.........