நடப்பு கவிதை

தெய்வம் என்பது தந்தை தானே..?

13, February 2017
Views 1195

தொப்புள் கொடியறுந்த நொடியில்
புவியில் பூத்த புதுமலராய்
என் கரங்களில் மகளே நீ
தந்தையின் முதல் நிலவாக

தாயின் சுமை முடிந்தது
என் மார்பிலும் தோளிலும்
வாழ்வின் முகவுரையாக
முகம் மலர்ந்து நின்றேன் தந்தையாக

தூக்கம் விழிப்பு
இரண்டுக்கும் மத்தியில்
உனக்கான எதிர்காலக் கனவுடன்
மனமென்னும் பட்டாம்பூச்சி பறந்தது

உன் உறக்கம் கலையாமல்
முத்தமிடும் கலையை பயின்றேன்

என் செல்லச் சிறுநதியே
உன் கடைவாயில் பாலொழுக
முதுகு திருப்பி புரள முயன்றதும்
கனவுக்குள் நீ சிரித்த
கன்னக்குழி சிரிப்பும்
தந்தை என் நெஞ்சுக்குள்
இன்றும் கவி பாடுது

உன் முதல் மழலைப் பேச்சு
தேவகானமாக
இன்றும் என் செவிகளில்

உன் பஞ்சுக் கரம் கோர்த்து
நடந்த பொழுதுகளிலெல்லாம்
உயிர் கரைந்தது இந்த தந்தைக்குள்

உன் முதல் கன்னிப் பேச்சு
கல்லூரியில் நிகழ்ந்தபோது
விழியோரம் கண்ணீர் கசிந்தது
தந்தையின் வியர்வைக்கு கிடைத்த பரிசென

பத்து நிமிடத் தாமதத்தில்
என் மனதை  நீ பதறவைத்தபோது
நீ விரும்பியதை
உன் சுட்டுவிரல் காட்டியது

இருபது வயதுவரை நீ விரும்பியதோ
விளையாட்டு பொம்மைகள்
இப்போது விரும்பியதோ
உன் வாழ்கைத் துணை
உன் தந்தையின் முதல் நடுக்கமது

மலர் அள்ளித் தூவினேன்
மனம்போல் மாங்கல்யம் தந்தேன்
உன்னை வழியனுப்பும் கையசைப்பில்
உன் தந்தையின் பிரிவுக் கண்ணீர்

ஆடி அடங்கி மனக்குமுறலுடன்
மனம் சோர்வடைந்து
வாழ்வின் இறுதி விளம்பில்
என் கால் தடங்கள் பயணிக்கின்றன
எதுவுமில்லை நிரந்தரமென