புரட்சி கவிதை

அடுத்த வேலைகள் தொடரட்டுமே...

Inthiran
08, August 2017
Views 417

எடுத்த எடுப்பிலே எல்லைகள் போட்டுத்
துரோகிகளாக்கிய சித்தாந்தம்
அடுத்த நொடியிலே அடங்கிப் போனதே
அவலம் நிறைந்ததோர் ஆரூடம்

படித்தவர்களைப் போட்டுத் தள்ளியே
படைக்க எண்ணிய சுதந்திரமும்
நடுத் தெருவிலே வந்து நிற்குதே
யார் யாரெல்லாம் காரணமோ

அடித்த அடிகளும் வெடித்த வெடிகளும்
வீரம் என்று பொருள் கிடையாது
துடித்துத் துடித்தே மடிந்து போனது
துயரம் நிறைந்த நம் வரலாறு

படைத்த பண்புகள் கிடைத்த கௌரவம்
தொலைந்து போனதும் தெரியாது
நடந்த நாடகம் படித்த பாடமாய்
அடுத்த வேலைகள் தொடரட்டுமே

வந்த மனிதர்கள் இந்த உலகிலே
வெந்து சாவதும் புதிதல்ல
வந்த வரவுகள் செலவாய்ப் போவது
சிந்தனை இல்லா செயல்தானே

எதிரி நண்பனாய் நண்பன் எதிரியாய்ப்
பதறி வாழ்வதில் லாபம் என்ன
குதறிப் பார்க்கையில் கதறி நோவதேன்
போட்ட விதை தானே மரமாகும்

ஆலயம் கோயில் அப்புறம் பார்க்கலாம்
வேலைகள் உண்டு என் செந்தமிழா
நீல வானமும் நீண்டு கொண்டிருக்கும்
நீண்ட நம் கனவுகள் அதுபோலே

என்று மாறுமோ என்று ஆறுதல்
சொல்லி வாழ்வதோ நம் வாழ்வு
நன்று மாறவே நல்ல அரசியல்
நான்கு திசைகளும் நடக்கட்டுமே

ஒன்று கூடுவாய் ஒன்று சேருவாய்
ஒன்று ஆகட்டும் இலட்சியமும்
நன்று பார்க்கலாம் வென்று ஆளலாம்
அன்று பாடலாம் புதுமைகளை

நல்லவன் என்று வாழ்ந்தாய் போதும்
வல்லவன் ஆகியும் வாழப்பார்
புல்லையுமுந்தன் ஆயுதமாக்கிப்
புதிய வரலாறு படைக்கப் பார்