புரட்சி கவிதை

அழியாத வடு

20, May 2017
Views 781

எதை எழுத
முள்ளிவாய்க்காலில்
கொள்ளி வைக்க முடியாமல்
அள்ளிப் புதைத்ததையா..?
சொல்லொணா துயரத்தை
இன்றும் சுமக்கும்
என் ஈழத்து உறவுகளின் குமுறலையா..?

அன்று கொல்லப்படும் போது
வேடிக்கை பார்த்த உலகிடம்
இன்று கோரிக்கை வைத்து
வேண்டுவதில் பலனில்லை. .

எட்டாண்டு கழிந்தும்
எட்டவில்லையா எவர் காதிலும்
எம்மவர் ஓலங்கள் .
கொட்டாவி விட்டும்
கொட்டில் குடிசையிலும்
கோடையில் வெந்தும்
மாரியில் நனைந்தும்
நலிவுற்ற வாழ்வுதானே இன்றும்.

எம் உயிர் காக்க
எவருமே வரவில்லை
எனும் ஏக்கம் போய்
மாற்று துணியின்றி
மறுவாழ்வு வேண்டி
மனம் குமுறுகின்றனர் .

மனித நேயம் பேசி
மணிக்கணக்கில் மணி சேர்க்க
அணி கொள்வதா. ..?
இன்றோடு மட்டும்தான்
உங்கள் பதிவு மே..18
அன்றாடம் அங்கு மே 18 தான் .

ஆண்டுகள் பல சென்றாலும்
அங்கு அவலங்கள் அழியாது
சுவடுகள் இருக்கும் சுவர்களில்
மனங்களில் கறை படிந்திருக்கும்
மாற்றம் எங்கு செய்ய வேண்டும்
மக்களே நீங்கள் தீர்மானியுங்கள்.