நடப்பு கவிதை

இறந்தவர்களின் அழைப்பு

27, January 2017
Views 1130

இறந்தவர்களின்
எண்களிலிருந்து
தினமும் அழைப்புகள்
வருவதாக
சில எண்களின்
பட்டியலைக் காட்டினாள்….

தங்களுக்கு வந்த தவறிய
அழைப்புகளால்தான்
தாங்கள் அழைத்ததாக
அவர்கள் கூறினார்களாம்.
இறந்தவர்கள் பயன்படுத்திய
எண்கள் பெரும்பாலும்
உபயோகத்தில் இல்லாமல்
போய்விடுகின்றன.

அவர்களுக்கு வரும் அழைப்புகளுக்கு
நாம் பதில் சொல்ல விரும்புவதில்லை.
இறந்தவர்களின் பெயர்களை
நம் அலைபேசியிலிருந்து
அழித்துவிடுகிறோம்.
அவர்களைப் பற்றிய நினைவுகளை
கொஞ்சம் கொஞ்சமாக
நாம் மறப்பதற்கு அது தேவைப்படுகிறது…

ஒரு நாள் மாலையில்
வீடு திரும்பியதும் உள்ளே செல்லாமல்
அவளது அறைச் சன்னல்
வழியே பார்த்தபோது
அந்தப் பட்டியலை வைத்துக்கொண்டு
அவள் அலைபேசியில்
எண்களை ஒற்றிக்கொண்டிருந்தாள்!