ஏனையவை

அண்ணன் காட்டும் அன்பு மாறாது

29, May 2011
Views 6909

சின்னக் குழந்தை நீ எனக்கு
அன்பு காட்டுவது புரியாமல்
அடம்பிடித்து நிற்கின்றாய்

நெஞ்சிலே தாலாட்ட நினைத்தால்
ஓங்கி உதைக்கின்றாய்
அன்பிலே சீராட்ட வந்தால்
விலகிப் போகின்றாய்

ஆயினும்
என் சின்னக் குழந்தை தான் நீ
நீ அடித்தாலும்
எனக்கு வலிக்காது

கள்ளங்கபடமற்றதாய்
உன் மனசு
களங்கமேற்படுத்தும் நாட்டத்தில்
உன் நட்புகள்
எப்போது தான் புரியப் போகின்றாய் நீ

சின்னச்சின்ன உதவிகளால்
உன் வாழ்க்கையைக் கசக்கி முகர
ஆவலாய்க் காத்திருக்கின்றன ஓநாய்கள்
சுட்டிக்காட்டியதற்காய்
என்னையே வெறுக்கின்றாய்
எட்ட நின்று சதிகளும் செய்கின்றாய்

எத்துனை தூரம் துன்பங்கள்
நீ தந்தாலும்..
இந்தப் பாசம் மாறாது

வாழ்க்கைப் பாதையில் ஒருநாள்
உறைத்திடும் உண்மைகளுனக்கு
உறக்கமின்றி அழுவாய்
ஆதரவாய் யாருமில்லாதிருப்பர்
எனையப்போது தான் உணர்வாய்

என் சின்னக் குழந்தை நீ
என்றைக்கு வந்தாலும்
உன்னைத் தாங்கித் தாலாட்டுவேன்
உன் அண்ணணாய்
ஆறுதலும் தருவேன்...