காதல் கவிதை

கவிதையின் வரிகள் நீதான்

30, April 2011
Views 12698

என் முதல் கவிதையும்
உனக்காகத் தான்
என்றைக்கும்
எண்ணங்கள் சிறகடிக்கும்
அதற்காகத் தான்…

இந்தளவு உன்னை
நான் நேசிப்பதேன்..?
விடை தெரியாத
வினாவென்றால் அதுதான்..

ஆயிரம் நினைவுகள் வந்தாலும்
அதில் உன் நினைவும் இருக்கும்..
நாளும் பொழுதும் உன்
ஞாபகம் நெஞ்சில் இருக்கும்….

நாளைக்கும்
நானுன்னை நினைப்பேன்..
நாடி நரம்புகளில்
ஓடும் குருதியில்
உன்பேர் கரைத்திருப்பேன்..

வாழ்வின் முழுமைக்கும்
நேசிப்பேன் உன்னை..
வாழ்தலின் அர்த்தம்
அதில் பொதிந்திருக்கும்..

இன்றைய படிப்பினைகள்
நாளைய விடியல்கள்…
நீயருகிருந்தால் தான்
எல்லாமே இனிக்கும்…

எந்தன் கண்ணீர்
துடைத்த உந்தன் கரம்பற்றி
நடந்திட வேண்டும்
நாளைய பொழுதுகளும்..

உன் காலடியிருந்து
பிரிந்திட வேண்டும்
வாழ்க்கையின்
கடைசி மூச்சுக்காற்றும்…

என் துணைவியே..
உலகின் உன்னதமே
நீதானடி எனக்கு..
நூலாய்ப் போன-என்
மனதுக்கு ஆறுதல்
உந்தன் வார்த்தைகள் தானடி..

வாழப்போகின்றேன்
இனியென்றும் உனக்காக…
நாளைய விடியல்கள்
மலரும் நமக்காக..