காதல் கவிதை

காதலித்துப் பார்

17, April 2011
Views 8150

உனக்காக விரிந்திருக்கும் வானம்
தொட்டுவிடும் தொலைவில்
சாதனைகள் காத்திருக்கும் உனக்காய்
எட்டிப் பிடிக்கும் தூரத்தில்
அலைந்து கொண்டிருப்பாய்
எட்டியோடும் ஒருத்தியே குறியாய்
நீ காதலித்துப் பார்

சாதிக்கப் பிறந்த நமக்கு
சமுத்திரம் கணுக்கால் அளவுதான்
இந்தப் பூமிப்பந்து
சுற்றிவரும் தூரம் தான் நடைபயின்று
வாய்க்கால் கண்டாலும் உனக்குப் பயமிருக்கும்
நீ ஆயிரம் தடவை சுற்றிவருவாய்
இரண்டடி சுற்றுக்குள்
ஒருத்தியின் தரிசனத்திற்காய்
காதலித்துப் பார்

உலகைக் கண்டுபிடித்தது மகலன் என்போர் சிலர்..
நான் தான் என்போர் பலர்
காதலித்துப் பார்
நீயும் சொல்வாய் அதை
காதலிதான் உலகமாயிருப்பாள்
உங்களுக்கு

இரவின் தூக்கம் பறிகொடுப்பாய்
காலையில் கடவுள் வணக்கம் மறப்பாய்
நினைவெல்லாம் அவளிடமே அடகு வைப்பாய்
காதலித்துப் பார்
உனக்குப் புரியும்

ஊணும் உறையுள் தான் எங்கள் தேவை
உயிர்வாழ்ந்திட
காதல் தான் உங்கள் கோரிக்கை உயிர் தாங்கிட
காதலித்துப் பார்
உன்வாழ்க்கை தலைகீழாய் மாறிப் போகும்
வாழ்வின் பாதி அழிந்தே போகும்
காதலித்துப் பார்...