ஏனையவை

வேண்டாம் போதும்

Inthiran
31, May 2017
Views 491

வைகின்ற வானம் வேண்டாம்
கை வீசும் பொய்கை போதும்
பொய் பேசும் கடவுள் வேண்டாம்
மெய் பேசும் அரக்கன் போதும்
மொய் எழுதும் முறைகள் வேண்டாம்

மையெழுதா விழிகள் போதும்
மாளிகையின் வாசம் வேண்டாம்
மல்லிகையின் வாசம் போதும்
புரியாத பாஷை வேண்டாம்
புரிகின்ற பார்வை போதும்
அளவில்லா செல்வம் வேண்டாம்

அளவான உழைப்பே போதும்
ஆரமுதம் நித்தம் வேண்டாம்
ஆசையுள்ள முத்தம் போதும்
விலையில்லா செல்வம் வேண்டாம்
விளைகின்ற நிலமே போதும்
தொலைகின்ற பெருமை வேண்டாம்

கலையுள்ள காட்சி போதும்
கடலாடும் வரங்கள் வேண்டாம்
அலையாடும் நதிகள் போதும்
வானுலகின் கிளிகள் வேண்டாம்
வள்ளுவனின் மொழியே போதும்
பாலூற்றும் சிலைகள் வேண்டாம்

பசியில்லா சிரிப்பே போதும்
பேதமுள்ள மனிதர் வேண்டாம்
ஆதவனின் வருகை போதும்
தேவர்களின் பூஜை வேண்டாம்
யாவருக்கும் மகிழ்ச்சி போதும்
சோதனைகள் யுத்தம் வேண்டாம்

சாதனையாய் ஈழம் போதும்
மனிதமில்லா மதங்கள் வேண்டாம்
மன்னிக்கும் இதயம் போதும்
துண்டாடும் சொந்தம் வேண்டாம்
கொண்டாடும் உறவு போதும்
வந்தாடும் செருக்கு வேண்டாம்
செந்தாழம் பூவே போதும்
பாகம் ஒரு பாகன் வேண்டாம்

தோகைமயில் நடனம் போதும்
பந்தாடும் பாவை வேண்டாம்
முந்தானை சேவை போதும்
முழுநீள வாழ்க்கை வேண்டாம்
பழுதில்லா அன்பே போதும்
ஏவலுக்கு யாரும் வேண்டாம்
காவலுக்குத் தென்றல் போதும்

தரணியெல்லாம் தவழ வேண்டாம்
தமிழ்க் கவிதை ஒன்றே போதும்
ஐயமுள்ள நீதி வேண்டாம்
ஆதரவாய்க் கதைகள் போதும்
காசு பணம் ஒன்றும் வேண்டாம்
காதலுள்ள கண்கள் போதும்
இங்கிதமா அதுவும் வேண்டாம்

சங்கீதம் மட்டும் போதும்
சிந்தையிலே சிறப்பு வேண்டாம்
செந்தமிழின் வளர்ச்சி போதும்
ஈனமுள்ள பிறப்பு வேண்டாம்
மானமுள்ள இறப்பே போதும்