ஏனையவை

என்ன இது பெருங் கனவு……!

Inthiran
25, May 2017
Views 759

தென்னை இளங்கீற்றும்
தெய்வீகக் காற்றும்
அன்னை மடிமீது வரும்
ஆனந்தப் பாட்டும்

இன்னுமந்த ஆலயத்தின்
ஆன்மீகப் பேச்சும்
சின்னமணித் தோப்பும்
சிங்காரச் சிட்டும்

மண்ணின் மடி மீது
கண்ணிறைந்த காட்சி
என்ன இது உலகம் என்று
எண்ணுகின்ற காட்சி

பாவிமனம் எப்போதும்
அதிசயிக்கும் காட்சி
காவியத்தில் இல்லாத
கவிதையெனும் மாட்சி

என்னை எங்கோ கொண்டு செல்லும்
ஏகாந்த நினைவு இப்போ
பண்ணுமில்லைப் பாடலில்லைப் 
பாடுபடும் மனது

எண்ணுகின்றேன் இப்பொழுது
எழுதுகிறேன் எப்பொழுதும்
வண்ண வண்ணக் கவிதைகளாம்
என்ன இது பெருங் கனவு……