காதல் கவிதை

காத்திருப்பு...!

09, June 2017
Views 306

அந்தி வானம்
ஆற்றோர படுகை
ஆற்றங்கரை அருகில்
ஆலமரமொன்றின் அடியில்
அமைதியாய் ஒருவன்
அவளின் வருகைக்காய் ஆவலுடன்……..

தவியாய்த் தவித்திருக்கிறான் - அவன்
தாகம் இன்னும் தீரவில்லை - அந்த
தாகம் தீர்க்கும் அற்புதத் ‘தீ’ - யவள்
அவனடி சேரவில்லை - அவள்
காலடி ஓசை - அவன்
காதினை எட்டவில்லை

காத்திருந்தே களைத்துவிட்டான் - ஆயினும்
சளைத்தான் இல்லை
கவலையுற வில்லை - தன்
நம்பிக்கை இழக்கவில்லை
வருவாள் என்றெண்ணி - வேதனையோடே
வீதியை வெறிக்கிறான்

மணலைப் பார்த்தான் - அருகிருந்த
மரத்துண்டு கொண்டு - மனதில்
பட்டதெல்லாம் கிறுக்கினான்

இதோ………
குனிந்திருந்தவன் சற்றே நிமிர்ந்தான்
கண்டு கொண்டான்……
அந்தி வானில் - ஓர்
அதிசய ஒளி
எட்டிப் பார்த்த நிலவு - அஞ்சி
கார்மேகத்துள் ஒழிந்து கொண்டது
நட்சத்திரங்கள் ஒன்று கூடி - ஓர்
இரகசிய மகாநாடு
தம் ஒளி மிஞ்சிய - இவ்
எழிலை என் செய்வதென
ஆம் அவள் வருகிறாள்…………..

இனம்புரியாத இன்பமொன்று
எங்கிருந்தோ ஊற்றெடுக்கிறது
புத்தம் புது பூவினைக் கண்டு
தேனெடுக்க விளையும் தும்பியாய்
மனம் மாறுபடத் துடிக்கிறது

ஓ…… இன்று தான் - என்
வாழ்க்கைப் புத்தகத்தின்
முக்கிய பகுதி திறக்கப் படுகிறதோ?
தனக்குத் தானே கேட்டுக் கொண்டான்

உலவும் உயிர் ஒன்று
மீண்டுமாய் ஓர் கருவறை தேடுகிறது
இந்தக் கருவறைக்கு
காலவரையறை கிடையாது
பத்தே மாதத்தில்
பாரம் இறக்கிய சுகம் காணும்
மகப்பேறு இங்கு நிகழாது
இதயக் கருவறை - இங்கு
காலம் முற்றும் வரை
காதல் குழந்தை துள்ளி விளையாடும்

இரவு அமைதியாய் தான் உளது
எங்கிருந்தோ ஓர் இன்னிசை
அவனுக்கு மட்டும்
காற்றும் கூட நிசப்தத்தில் - ஆயினும்
நறுமணம் கமழ்கிறது தென்றலடிக்கிறது
அவனுக்காய் அவனுக்கு மட்டும்

கட்டி அணைத்தான் - இருவர்
கன்னங்களும் ஈரத்தில்
அகத்தில் மட்டும் - ஓர்
அளவிட முடியா வெப்பம்

காதல் தேர் ஏறி
ககனத்தில் மிதப்பதாய்
கற்பனை அல்ல……..அவன்
கன்னி இராசி

தேவலோக ரிசி அவன்
தெய்வீக மாது அவள்
இன்று அவன் வானில்
இந்திர விழா

நடனத்தில் களித்து - இருவரும்
மெய் சிலிர்த்துப் போயினர்

நாட்டியக் களைப்பில் தடுமாறிக்
கீழே விழுந்தவன் திடுக்கிட்டு எழுந்தான்
நிமிர்ந்து பார்த்தான்
எங்கும் ஒரே இருள் இருள்
சுற்று முற்றும் பார்த்தவன்
திகைத்துப் போயினான் - அவன்
தலையில் ஆலம் சருகுகள்
அவள்…………?