ஏனையவை

மிதக்கும்வெனிஸ் நகரம்...!

Inthiran
05, June 2017
Views 699

கொள்ளை அழகுகள் கோபுரமாய்க்
கொட்டிக் கிடக்கின்ற கோலாகலம் கண்டு
அள்ளி வந்த நினைவுகளில்
இவை தனியே ஒன்றிரெண்டு

தெள்ளு தமிழ் சேர்த்தனைக்கச்
 சீறி வரும் கவிதை வெள்ளம்
உள்ளமெல்லாம் தெவிட்டாது
ஒட்டிக் கொண்ட வெனிஸ் நகரம்

பாகான வளைவுகளை
உளி செதுக்கா நெளிவுகளை
புராதன அழிவுகளை
அந்தரங்கத் தெளிவுகளைக்

கண்டுகொண்டு வந்ததனால்
வாழ்க்கைக் கிடங்கின்
வரலாற்று மூலையிலே
வகை தெரியாப் பூரிப்பு

காலைச் சாப்பாடு
கண்களுக்குள் கூப்பாடு
மதியத் திண்டாட்டம்
மாளிகையில் பந்தாட்டம்

மாலைநிலா வண்டாட்டம்
ரோஜாப்பூச் செண்டாட்டம்
இரவுக் கொண்டாட்டம்
இனிப்பான களியாட்டம்

ரோமாபுரி வீழ்கிறது
என்று அறிந்த மன்னன்
இருப்பதைக் காப்பாற்ற
இயற்றிய நகரமது

எதுகை மோனை கொண்ட
புதுமைக் கவிதைபோல
சதுப்புநிலம் செதுக்கிச்
சாதித்த வெனிஸ் நகரம்