நடப்பு கவிதை

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!!!

01, June 2017
Views 701

மண்ணில் பிறக்கும் அத்தனை உயிர்க்கும்
மாற்றங்கள் எத்தனை இருந்த போதிலும்
மாற்றி அமைத்திட முடியா ஒன்று - அது
மரணம் என்னும் மாறா நியதி

நிலையற்ற உடல் கொண்டும்
நிலையாமையில் மறதி கொண்டு
ஏனிந்த பிரிவு உனக்குள் - மண்ணின்
குறு நாடகமது நிறைவேறு முன்

உயிர்கள் அனைத்தினும் உயர்ந்தது - உந்தன்
உன்னத உயிர் தான் மானுடா - ஆயினும்
சில சமயம் பிற உயிர்கள்
உன்னை விஞ்சுகின்றனவே இயல்பில்

கறுப்பு வெள்ளை வேறுபாடு
உயர்ந்தவன் தாழ்ந்தவன் சண்டை
காயத்தில் காயம் கண்டால் - வரும்
குருதி சிவப்பு தானே அறியாயோ

வெள்ளை நிறக் கொக்கும்
கருமை நிறக் காகமும்
பறவை என்று உரைக்கையில்
ஒன்றுதான் என்பது அறிக

ஏனடா
சாதிகள் பல ஆக்கி - மனித
சாதிக்கு சாவுமணி அடிக்கிறாய்
பணம் கொண்டு பதவி கொண்டு
பகுத்தறிவுக்கு விலை வகுக்கிறாய்

சாதனை பல படைத்திட்டாலும்
சடங்குகளுக்கு வாழையும்
சாதிக்கென வேலியும் கட்டுவதில்
இன்றும் நீ சளைக்கவில்லை

தொன்று தொட்டு தொடர்வதால்
தவிர்க்க முடியாமல் தவிக்கின்றாயா
இருக்கட்டும் பரவாயில்லை – என
உன்னகத்தே இருத்திக் கொண்டாயா – அன்றியும்
இன்னும் தேவைதான் என்றெண்ணி
விருப்புடன் விருத்தி செய்கின்றாயா?

வேற்றுமை இன்றி மனிதன் இல்லை
உண்மை தான்
பிறப்பால் வேற்றுமை மதத்தால் வேற்றுமை
இனத்தால் வேற்றுமை மொழியால் வேற்றுமை
இருக்கட்டும் பரவாயில்லை
உனை இணைக்கும் மனிதத்துவம்
உன்னிடம் தானே உண்டு மானுடா???

எந்த சாதியும் உயர்ந்ததல்ல
மனிதம் எனும் சாதி தவிர
எந்த மொழியும் உயர்ந்ததல்ல
அன்பென்னும் உன்னத மொழி தவிர

மனிதனென்ன மரமென்ன
அறிவென்ன மடைமை என்ன
பணமென்ன குப்பை என்ன – நிழலில்
எதுவாயினும் எஞ்சுவது ஒன்றே – அது
கருமை எனுமதன் விம்பமே

நிழலின் கீழே வாழ்ந்து கொண்டு
நிஜத்தின் தன்மையை மறந்திட்டாய்
நிழலை உற்றுப்பார் - உந்தன்
நிஜமது நீயே உணருவாய்

சமூகப் பிராணியடா நீ
சமத்துவம் உந்தன் தனித்துவம் - இதை
இழக்கையில் மனிதத்துவம் இழக்கிறாய்
சாதாரண பிராணியினும் கீழோனாகிறாய்

வேண்டாம்
உன் மனிதத்துவம் மரிக்க வேண்டாம்

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
வாழ்தலும் சாதலும் நிச்சயம் - இங்கு
சமத்துவம் என்பது அவசியம் - அன்றேல்
வாழ்வினும் சாவதே உத்தமம்.