நடப்பு கவிதை

வாழ்வின் பயணங்கள்!!

17, May 2017
Views 583

வதைபடும் வாழ்வியலிது
உணர்ச்சிகளுக்கு மத்தியில்
உபத்திரவப்படுகின்ற
இயலாமையிது

பெரும்பான்மை இனத்தின்
சுயநலத்தினால் - இன்று
சுக்குநூறாகின்றன
சிறுபான்மையினத்தின் இறைமை

தாலிகள் வீழ்ந்த கணக்கு
பார்ப்போரின்றி
உறவுகளின் அவல ஒலி - இன்றும்
கேட்டுக்கொண்டிருக்க
இவர்களின் நியாயங்கள்
விழுங்கப்படுகின்றன

போர்மேகங்கள் கலைந்து விட்டது
முகங்கள் புன்னகைக்கின்றன - இன்றும்
இருள் விலகுவதாயில்லை
இவர்களின் நம்பிக்கையொலி செத்துவிட்டது

துரோகங்கள் மலிந்த மண்ணில்
ஈனங்கள் நிறைந்த பாதையில்
பதவியில் பவனிவருவோரின்
துகிலுரியப்படும் வரை
அவலங்கள் சுமந்து
பரிதவிக்கும் உயிர்களாக
இவர்கள் எப்போதும்

காலவோட்டத்தோடு
அள்ளுண்டு போகின்றது
இவர்களின் அவலவாழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவோடு
சோகங்கள் மனதில் சுமந்த
இவர்களின் முற்றமெங்கும்
மூச்செறிகிறது - இன்றும்
மௌனத்தின் பிரதிபலிப்பு